×

காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்ட பறிமுதல் வாகனங்கள் அகற்றம்

 

மதுராந்தகம், ஏப்.29: தினகரன் செய்தி எதிரொலியால் மதுராந்தகம் காவல் நிலையம் அருகே பல மாதங்களாக நிறுத்தபட்டிருந்த பறிமுதல் வாகனங்கள் அகற்றப்பட்டன. மதுராந்தகம் நகரம் ஹாஸ்பிடல் சாலையில் அமைந்துள்ள காவல் நிலையம் ஓரம் மதில் சுவர் அருகே காவல் நிலைய வாயிலின் இருபுறங்களிலும் குற்ற வழக்குகள் மற்றும் விபத்தில் சிக்கும் கார்கள், வேன்கள், மணல் கடத்தும் மாட்டு வண்டிகள் உள்ளிட்ட பறிமுதல் வாகனங்கள் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்த வாகனங்களில் சேரும் குப்பை, கூளங்கள் மற்றும் தூசிகளால் மிகுந்த சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. மேலும், விஷ பூச்சிகள் தங்கும் கூடாரங்களாகவும் இந்த வாகனங்கள் மாறி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி அப்பகுதியில் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டு இருக்கும் இந்த வாகனங்களால் போக்குவரத்து நெரிசலும் அவ்வப்போது ஏற்பட்டு வந்தது. இதனால், இந்த வாகனங்களை அகற்றி மக்களுக்கு பாதிப்பு இல்லாத இடத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

மேலும் இதுகுறித்து கடந்த 26ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து உடனடி நடவடிக்கை மேற்கொண்ட மதுராந்தகம் காவல் ஆய்வாளர், அங்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்பட்டிருந்த பறிமுதல் வாகனங்கள் அன்றே அகற்றப்பட்டு அப்பகுதி முழுவதும் தூய்மை செய்யப்பட்டது. இதையடுத்து வியாபாரிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மதுராந்தகம் காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.

The post காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்ட பறிமுதல் வாகனங்கள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Madhurandakam ,Maduraandakam police station ,Dinakaran ,Madurathangam ,
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...